Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 29 August 2013

குரல்வளையை நெறிக்கும் "ஊடகங்கள்!"...

இப்போதல்லாம் பேஸ்புக் சண்டை, குழாயடி சண்டையை விட மோசமாகிவிட்டது.... அப்படி நிகழுற சண்டையில் சமீபத்தில் அதிகம் திட்டிக்கொள்ள பயன்படுத்துற வார்த்தை “அவனா நீ?”... இன்னொரு ஆணோடு, ஒரு ஆணை இணைத்து பேசுவதை தான் அவங்க கேவலப்படுத்துறதின் உச்சமாக மக்கள் நினைக்குறாங்க... அப்படி இப்போது ஒரு வாக்குவாதத்தில், அடுத்தவரை கேவலப்படுத்த “ஒருபால் ஈர்ப்பை” பயன்படுத்துற நபர்களின் பட்டியலில் இணைந்திருப்பவர், ஒரு பிரபல வார இதழின் முக்கிய பொறுப்பாசிரியர்.... உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்குற ஒரு பத்திரிகை துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த நபரின் இந்த செயலால், ஊடக துறை கூட நம்மை பற்றிய எத்தகைய மனநிலையை கொண்டிருக்கிறார்கள்? என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கு....
தெளிவா அவங்களுக்கு நான் விளக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கு....
அன்புள்ள ஊடக துறை நண்பர்களே,
உங்களுக்கு ஆச்சரியமான ஒரு விஷயத்தை சொல்லட்டுமா?.... நாங்களும் கண்களாலதான் பாக்குறோம், காதாலதான் கேக்குறோம், வாயாலதான் சாப்பிடுறோம்... எங்களுக்கும் ரெண்டு கைகள், ரெண்டு கால்கள்... அப்புறம்... இதுக்கு மேல நான் சொல்ல விரும்பல... எங்களை நீங்க கொம்பு முளைத்த ஏலியன் போல கற்பனை செய்றீங்களா?னு எனக்கு புரியல...
ஒருத்தனை சாதியால ஒடுக்குறதும், மதத்தால பிரிச்சு பாக்குறதும், இனத்தால நசுக்கப்படுறதும் மட்டும் குற்றமா தெரியுற உங்களுக்கு, பாலீர்ப்பு காரணத்தால் கேவலப்படுத்தப்படுறது தவறு’ன்னு மட்டும் ஏன் புரியல?...
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு நபரை, சாதியின் பெயரை சொல்லி திட்டினாலே “வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்” கீழ் திட்டிய நபருக்கு தண்டனை கொடுக்க முடியும், மதரீதியாக ஒருத்தரை தவறாக பேசினால் அவரை “நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதாக” கூறி வழக்கு தொடுக்க முடியும்... ஆனால், ஒருத்தனை பாலீர்ப்பு காரணத்தால் மட்டும் ரொம்ப எளிதா நீங்க கேவலப்படுத்தி, அந்த விஷயத்தை ரசித்து சிரிக்கவும் உங்களால முடியுறது ஆச்சரியமா இருக்கு....
நான் பிறப்பால் மனுஷன், உணர்வால் தமிழன், பாலினத்தால் ஆண் என்று என்னை நீங்க அடையாளப்படுத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது, “நான் யாருடன் படுக்கிறேன்?” என்ற ஒரு விஷயத்தை நீங்கள் அலசி ஆராய்ந்து என்னை “ஒருபால் ஈர்ப்பு” நபராக நீங்க புறக்கணிக்குறது விந்தையா இருக்கு.... என்னை பற்றி பேச உங்களுக்கு லட்சம் விஷயங்கள் இருக்கையில், என் படுக்கை அறையை பகிரும் பிரச்சினையில் மட்டும் நீங்கள் தலையிடுவது ஏன்?...
அறிவியலும், ஆன்றோரும், பல நாட்டு அரசுகளும் ஒருபால் ஈர்ப்பை தவறில்லை என்று சொல்லி, அங்கீகரிக்க தொடங்கி இருக்குற காலக்கட்டத்துல தான், இன்னமும் எங்களின் பாலீர்ப்பு அடையாளத்தை நகைப்புக்குரிய ஒரு விஷயமாக பார்க்கும் நிலைமை நம் நாட்டில் நடக்கிறது...
அதுவும் நாட்டிற்கு உண்மையை சொல்ல வேண்டிய ஊடக துறை நண்பர்களே இவ்வாறு செய்வது, அபாயத்தின் ஆரம்பமாக தெரியுது.... எங்க உரிமைகளுக்கு குரல் கொடுக்க இங்கே சட்டங்கள் இல்லை, மக்களின் மனநிலை இல்லை, இயல்பான சூழல் இல்லை... இத்தனை “இல்லை”களையும் மாற்றிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்த ஊடக துறையும் கூட, குட்டையில் ஊறிய மட்டையை போல எங்களை நினைப்பது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது...
இப்படி பாவப்பட்டவர்களாக, மன்னிக்க முடியாத குற்றவாளியாக, தீண்டத்தகாதவர்களாக எங்களை நினைக்குற அளவுக்கு நாங்கள் எந்த விதத்தில தரம் தாழ்ந்துவிட்டோம் என்று எனக்கு புரியல... இன்னமும் எங்களுள் பெரும்பாலானவர்கள் தங்களை வெளிப்படுத்தாததற்கு காரணம், இந்த சமூகத்தின் “ஒருபால் ஈர்ப்பு” பற்றிய புரிதலின்மைதான்... மற்றவர்களுக்கு அது புரியவில்லை என்றாலும், ஊடக துறையில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் எங்கள் நியாயங்கள் புரிந்திருக்கும்... அப்படி இருந்தும், எங்கள் குரல்வளையை நசுக்கும் விதமாகவே நீங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான காரணம் மட்டும் எனக்கு புரியவில்லை...
இத்தனை ஆண்டுகளில் சில பத்திரிகைகளில் துணுக்கு செய்திகளாக வந்த எங்கள் போராட்டங்களை பற்றிய செய்தியை வைத்தே இத்தனை காலம், நீங்கள் எங்களின் உரிமைக்கு குரல் கொடுப்பீர்கள் என்று அசட்டு நம்பிக்கையில் இருந்துவிட்டோம்... இந்த அசட்டு நம்பிக்கையும், பொறுமையும் இப்போது எங்களை மக்கள் ஒரு “இழிபிறவியை” போல பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது....
நாங்கள் நம்பிய கடைசி அஸ்திரமான ஊடகங்களும் எங்களை கைவிட்டு விட்டதோ? என்று பயமாக இருக்கிறது... இந்த தருணத்திலாவது எங்கள் வருத்தத்தினை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தால்தான் இப்போதும் இதனை சொல்கிறேன்... இனியாவது எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு.....

                                                                             நசுக்கப்பட்ட குரல்வளைக்கு சொந்தக்காரன்...

Sunday 25 August 2013

"இது தந்தையின் தாலாட்டு....!" - குறுநாவல்....


("கதிர் ஒளியாய் அவன், பனித்துளியாய் நான்" கதை முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் (தாயுமானவன்) தொடர்ந்து "இது தந்தையின் தாலாட்டு...!" வடிவில் நான்காம் பாகத்தை எட்டியுள்ளது.... உங்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடரும் இந்த நான்காம் பாகத்தையும் நீங்கள் அங்கீகரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு......முதல் மூன்று பாகம் படிக்கவில்லை என்றால் கூட, புதிதாக படிப்பவர்களுக்கு நான்காம் பாகம் ஒரு தனி கதையை போல தெரியும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது கதை....)
 


விதவிதமான உணவு பதார்த்தங்களுக்கு நடுநாயகமாக அமர்ந்து வருண் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவனுக்கு ரசித்து பரிமாறிக்கொண்டு இருக்கிறாள் அம்மா....
“எலும்பை நல்லா கடிச்சு தின்னுப்பா.... ஈரல் வைக்கவா?” பதிலை எதிர்பார்க்காமல் சட்டிக்குள் ஈரல் தேடுவதில் முனைப்பை காட்டினாள் அம்மா....
அம்மா வைக்கும் எதையும் வருணால் மறுக்கமுடியவில்லை... இப்போதைக்கு அவன் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை.... இவ்வளவு சாப்பிடுவதால் எரிக்கப்பட வேண்டிய கலோரிகள் பற்றியும், கரைக்கப்பட வேண்டிய கொலஸ்ட்ரால் பற்றியும், தடுக்கப்படவேண்டிய க்ளுக்கொஸ் அளவு பற்றியெல்லாம் வருண் யோசிக்கவில்லை... அவன் யோசிப்பதல்லாம் ஒன்றுதான், அது தவிர்க்க முடியாத அம்மாவின் பாசம்...
“நெறைய அள்ளி சாப்பிடுய்யா... சோறு சவக்களிச்சு போய்டும்....” நீண்ட நேர தேடலுக்கு பிறகு கரண்டியில் அகப்பட்ட ஈரல் துண்டுகளை இலையில் வைத்தவாறே கூறினாள்... இந்த காட்சிகளை பார்த்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, தன்னை மறந்து முகத்தில் குடிகொண்டிருக்கும் புன்னகையோடு ரசித்துக்கொண்டு இருக்கிறார்....
இந்த பாச பிணைப்புக்கு மத்தியில், கையில் அலைபேசியை எடுத்துக்கொண்டு சென்ற யாழினியை நீங்களோ நானோ கவனிக்க மறந்துவிட்டோம்... அலைபேசியை காதில் வைத்து, வாழை தோட்டத்தையே வலம் வந்து கொண்டிருக்கிறாள் யாழினி... பட்டினும் மெல்லிய அவள் பாதங்கள், வாழை தோட்டத்து மண்ணில் பட்டதும் சிலிர்ப்படைந்தது...
“எங்க டாடி இருக்கீங்க?”
“கனடால தான்மா... நம்ம வீட்லதான்.... இந்தியா எப்டி இருக்கு?... குட்டிக்கு புடிச்சிருக்கா?”
“ஹ்ம்ம்... ரொம்ப... தாத்தா பாட்டி ரொம்ப ஸ்வீட் டாட்... நீங்க வந்திருந்தா...” தயங்கினாள்....
“வந்திருந்தா சிவபூஜைல கரடி மாதிரி இருந்திருப்பேன்.... அதான் அவங்களே கனடா வரப்போறாங்கள்ல?... அப்போ பாத்துக்கறேன்... அப்புறம்....”
“நீங்க இழுக்குறது புரியுது.... உங்க டார்லிங் வீட்டுக்குள்ள ஒரு முனியாண்டி விலாசையே குத்தகைக்கு எடுத்திருக்கார்.... எல்லாத்தையும் காலி பண்ணிட்டு வர்றதுக்கு எப்டியும் ஈவ்னிங் ஆகிடும்.... அதுவரைக்கும் கொஞ்சம் பேசாம இருக்க முடியுமா உங்களால?” சிரித்தாள்....
“ஹ்ம்ம்... ட்ரை பண்றேன்டா... செட்டில் ஆனப்புறம் பேச சொல்லு...”
“உங்க லவ்’வை பார்த்தா எனக்கே பொறாமையா இருக்கு டாட்.... இத்தனை வருஷத்துல இவ்வளவு அன்யோன்யமா இருக்கீங்க... க்ரேட் டாட்...”
“போதும் போதும்.... நீயே கண்ணு வச்சிடாதடா.... உண்மையை சொல்லனும்னா நீ எங்க வாழ்க்கைல வந்ததுக்கு அப்புறம்தான் இவ்வளவு சந்தோஷமும்.... நீ எங்க தேவதைடா”
“ஓகே ஓகே... கூல்.... வழக்கமா இப்டி எமோஷனல் ஆகுற ஆள், இப்போ மோஷன் போற அளவுக்கு சாப்பிட்டுகிட்டு இருக்கார்.... ஜாலியா பேசுற ஆள், இப்டி எமோஷனலா பேசுறீங்க.... நான் வீட்டுக்குள்ள போறேன் டாட், இல்லைனா அப்பாவ சாப்புட வச்சே டயர்ட் ஆக்கிடுவாங்க பாட்டி”
அழைப்பை துண்டித்து உள்ளே போனாள் யாழினி.... இப்போதுதான் ரசம் சாதம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான்... அடுத்து ஊற்றி சாப்பிடுவதற்காக வரிசையில்  ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறது “தயிர்”... வருணின் முகத்தில் இப்போதே வியர்வை வழிய தொடங்கிவிட்டது... சாப்பிட்டே இவ்வளவு களைத்துப்போய்விட்டான், யாழினிக்கு சிரிப்பு வந்தது...
அந்த களேபரங்களுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாத யாழினி, அருகில் இருந்த வருணின் அறைக்குள் சென்றாள்... “என்றைக்காவது வருண் வருவான்!” என்று பாரதிராஜா படத்தின் நாயகி போல, நித்தமும் அந்த அறை அவனுக்காக காத்திருந்திருக்கிறது.... தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, கசங்காத படுக்கை விரிப்பை காரணங்களே இல்லாமல் வாரம் ஒருமுறை மாற்றி, பழைய புகைப்படங்கள் புது பிரேம் போடப்பட்டு மணப்பெண்ணை போல காத்திருக்கும் அந்த அறைக்கு, இன்றுதான் வருணின் வரவு சாப விமோச்சனம் அளித்திருக்கிறது....
சுவற்றை முழுவதும் ஆக்கிரமித்து இருப்பது வருணின் புகைப்படங்களே.... அழுத கண்களோடும், பார்வையின் மிரட்சியோடும்  இரண்டாம் வரிசையில் மூன்றாவது குட்டி சிறுவனாக நிற்கும் “எல்.கே.ஜி வகுப்பு புகைப்படம்” முதல், மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஆளுநரின் கையால் சான்றிதழ் பெறும் “மருத்துவர் வருண்” வரை, கால வரிசைப்படி அந்த புகைப்படங்கள் மாட்டி இருக்கிறது....
முகத்தில் புன்சிரிப்போடு ஒவ்வொரு புகைப்படமாக கடந்த யாழினி, வருணுடன் படங்கள் வழியாகவே இருபது வருட பயணத்தை நிறைவு செய்திருக்கிறாள்...
“என்னடா பாத்து சிரிச்சுகிட்டு இருக்க?” வருண் உள்ளே நுழைந்தான்....
சிரிப்பு மாறாமல், “சின்ன வயசுல நீங்க அவ்ளோ க்யூட்டா இருக்கிங்கப்பா.... இதல்லாம் டாடி’கிட்ட காட்டனும்...”
“ஏண்டா உனக்கு இவ்வளவு கொலைவெறி... ஒரு படத்துக்கு ரெண்டு நாள்’னு வச்சா கூட, குறைஞ்சது ரெண்டு மாசத்துக்கு என்னைய ஓட்டியே கொன்னுடுவான்...” சிரித்தான் வருண்... அந்த சிரிப்பின் கணப்பொழுதில் அவன் கண்களில் விக்கியின் முகம் வந்து போனது....
“ஹ ஹ ஹா.... உண்மைதான்பா...” கல்லூரியில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தில் பார்வையை பதித்தபடியே சிரித்தாள்...
“இதல்லாம் உங்க பாட்டி வேலைடா.... ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் அவங்க இந்த ரூம் சுத்தம் பண்றதுக்கு செலவு செய்வாங்களாம், அப்பா சொன்னாரு.... அம்மாவுக்கு யோசிக்கவல்லாம் தெரியாது, லாஜிக்கல்லாம் புரியாது.... புரிஞ்சது பாசம் மட்டும்தான்” கண்களின் நெகிழ்ச்சி மாறாமல், எச்சிலை விழுங்க முயன்றபடியே பேசினான்....
“ஹ்ம்ம்... நீங்க ரொம்ப லக்கிப்பா...”
“அம்மா பாசத்தை நீ மிஸ் பண்றியாடா?” யாழினியின் கையை பிடித்தபடியே கேட்டான் வருண்... அந்த கேள்வியில் ஒரு குற்ற உணர்ச்சியும் கூடவே தெரிந்தது....
“நீங்க எதுக்கு கேட்குறீங்கன்னு புரியுதுப்பா.... உண்மையை சொல்லனும்னா இப்போவரைக்கும் ‘அம்மா இருந்திருந்தா ..!’னு ஒரு எண்ணமே, யோசனையே எனக்கு வந்ததில்லை.... அந்த அளவுக்கு நீங்களும் டாடியும் போட்டி போட்டுட்டு பாசத்தை காட்டி வளர்த்திங்க....” வருணின் தோள் மீது சாய்ந்தபடி சொன்னாள் யாழினி....
“இல்லடா... நான் அதுக்கு சொல்லல.... தாய்ப்பாசம் ரொம்ப பெரிய விஷயம், அதை நீ மிஸ் பண்றியோன்னு தோனுச்சு அதான்...”
“ஒரு பொண்ணு கொடுக்குற பாசத்துக்கு பேர்தான் தாய்ப்பாசமாப்பா?... நிச்சயமா இல்ல... ஒரு ஆணாலும் அதைவிட அளவுக்கு அதிகமான பாசத்தை காட்டமுடியும்... இதுக்கு நீங்களும் டாடியுமே உதாரணம்.... தெளிவா சொல்லனும்னா, பாட்டி உங்ககிட்ட காட்டுற பாசத்தைவிட, அதிக பாசத்தை நீங்களும் டாடியும் எனக்கு காட்டி இருக்கீங்க.... அதுல உங்களுக்கு சந்தேகமோ, குழப்பமோ வேணாம்....”
“ரொம்ப தெளிவா பேசுற குட்டி... எல்லாம் உன் டாடியோட ட்ரைனிங்’கா?”
“ஹ ஹ ஹா.... ஆமா... உங்க டார்லிங் உங்ககூட பேசனும்னு சொன்னாரு, போய் பேசிட்டு வாங்க... உங்க ரூம்’ல நான் பாக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு”
அலைபேசியை எடுத்துக்கொண்டு வருண் செல்ல, மேற்கொண்டு அறையை நோட்டமிடுவதை தொடர்ந்தாள் யாழினி.... இப்போது யாழினி சொல்வது, வருணை மகிழ்விக்க இல்லை... ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்.... ஒரு கைக்குழந்தையாக வருண், விக்கி என்கிற இரண்டு இளைஞர்களிடம் வந்துசேர்ந்த யாழினி, நிச்சயமாகவே அவர்களின் காதலுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால்தான்....
முதன்முதலாக இரண்டு வயது குழந்தையாக யாழினி வீட்டிற்குள் நுழைந்தபோது, ஒரு தேவதையின் வரவு அந்த வீட்டிற்குள் நிகழ்ந்ததை போல இருந்தது... குழந்தையின் அழுகை சத்தமும், சிரிப்பொலியும் அந்த வீட்டின் அத்தனை பாவங்களையும், கவலைகளையும் துரத்திடம் “வேத மந்திரம்” என்பதை இருவரும் உணர்ந்தாகள்... ஆனாலும், ஒரு குழப்பம் விரைவில் அவர்களுக்குள் உண்டானது...
“குழந்தைகளை பகலில் பார்த்துக்கொள்ளும் டே கேர் மையங்களில் யாழினியை சேர்த்துவிடலாமா?” என்கிற யோசனைக்கு இருவருமே செல்லவில்லை... அதற்கு காரணம் “குழந்தையை தத்தெடுத்ததே  வளர்க்கத்தான், அதை மீண்டும் ஒரு நிறுவனத்தில் வளர்க்க கொடுப்பதற்கு அல்ல” என்ற எண்ணத்தில் இருவருமே உறுதியாக இருந்தார்கள்.... ஒரு வாரம் இருவரும் விடுப்பெடுத்துக்கொண்டு யாழினியுடன் சந்தோஷமாக கழித்தார்கள்... ஒரு வாரம் விடுப்பெடுப்பது சரி, குறைந்தது இன்னும் ஆறு மாத காலமாவது இருவருள் ஒருவர் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்....
“நான் பாத்துக்கறேன் விக்கி... என் ஹாஸ்பிட்டல்ல எனக்கு ஒன்னும் கட்டாயமல்லாம் இல்ல... ஆறு மாசம் கழிச்சு கூட மறுபடியும் அங்க சேர்ந்துக்குவேன்.... நீ வேலைக்கு போ.... ஆறு மாசம் கழிச்சு யாழினியை ப்ரீ ஸ்கூல்’ல சேர்த்து விடலாம்”
“இல்ல வருண்.... நானே பாத்துக்கறேன்.... யாழினியை விட ஜாப் ஒன்னும் எனக்கு முக்கியமில்ல”
“அதுக்கு சொல்லல... உனக்கு அவள எப்டி பார்த்துக்கனும்னு கூட தெரியாது.... அதை கத்துக்கவே உனக்கு எப்டியும் இன்னும் ஒரு மாசம் ஆகிடும்...”
“அதல்லாம் ஒண்ணுமில்ல.... அதை நான் கத்துப்பேன்... இது ஒன்னும் புரிஞ்சுக்க முடியாத அல்ஜீப்ரா கணக்கு கிடையாது...”
“சரி, ஒரு ரெண்டு நாள் நான் இல்லாம நீ அவளை கவனிச்சு பாத்துக்கோ, அதுக்கப்புறம் நீயே முடிவு பண்ணி சொல்லு... உன்னால முடியுற பட்சத்தில் நான் நிச்சயம் அதில் தலையிட மாட்டேன்”
இப்படி ஒரு “இரண்டு நாள்” சோதனையை நோக்கி அன்றைய இரவு கழிந்தது.....
விடிவதற்கு முன்பே எழுந்த வருண், சமையலறை முழுவதையும் ஆக்கிரமித்து வேலைகளை பரபரக்க செய்தான்....
யாழினியின் அழுகையோடுதான் அன்று விடியல் பிறந்தது விக்கிக்கு.... தூக்கம் கலையாத கண்களில் யாழினி ஒரு மங்கிய ஓவியம் போல அழகாக தெரிகிறாள்... மெல்ல நகர்ந்து, இரண்டு கரடி பொம்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முழுவதும் விழிக்க முடியாத கண்களோடு யாழினியின் அருகில் படுத்து அவளை தட்டிக்கொடுத்து மீண்டும் உறங்க வைக்க முயன்றான் விக்கி.... சரியாக அந்த நேரத்தில் கையில் பாலோடு உள்ளே நுழைந்தான் வருண்.... பால் குடித்து பசியாறிய பிறகுதான் யாழினி அழுகையை நிறுத்தி, படுக்கையை விட்டு எழுந்து தத்தி தடுமாறி மழலை நடையோடு ஹாலை நோக்கி ஓடினாள், அவளை துரத்தியவாறே படுக்கையைவிட்டு எழுந்து ஓடினான் விக்கியும்....
வேலைகளை முடித்து மருத்துவமனைக்கு கிளம்பும் முன், ஹாலில் அமர்ந்திருந்த விக்கியை பார்த்த வருண், “பத்திரமா பாத்துக்கோடா.... மதியம் சாதத்துக்கு காய்கறி சூப் கலந்து ஊட்டிவிடு... நல்லா பிசைஞ்சு ஊட்டனும்.... பதினொரு மணி போல பால் கொடுத்திடு, கண்ட பிஸ்கட்டும் கொடுக்காத.... அவளுக்கு கொடுக்க வேண்டியதை டேபிள்ல எடுத்து வச்சிருக்கேன்... தனியா விட்டுட்டு எங்கயும் போய்டாத, அவ எப்பவும் கலர் கலரா இருக்குறதால அந்த பால்கனிக்கு ஓடிடுவா.... அப்புறம்...”
இடைமறித்த விக்கி, “போதும்டா... நான் பாத்துக்கறேன்.... அவதான் குழந்தை, நான் இல்ல” கொஞ்சம் வேகமாகவே பேசினான்...
சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, கதவை சாதித்திய வருண், சில நொடிகளுக்குள் கண்களை விட்டு மறைந்தான்... அவ்வளவு நேரமும் அமைதியாக விக்கியின் மடியில் அமர்ந்திருந்த யாழினி அழத்தொடங்கினாள்....
ஹால் முழுக்க கடை பரப்பி கிடந்த விளையாட்டு பொம்மைகள் ஒவ்வொன்றும், அவள் முன் வைக்கப்பட்டபோதும் அழுகை நிற்கவில்லை.... வாத்து பொம்மை “குவாக்... குவாக்....” சத்தமிட, இன்னும் அதிக சத்தத்தில் யாழினி அழுதாள்... புகைவண்டி பொம்மை தண்டவாளத்தை கடந்து, தரையில் ஓடி சுவற்றில் மோதி தடம் புரண்டு ஓட்டத்தை நிறுத்தியது....
“ஏண்டா குட்டி அழற?... என்ன வேணும் பாப்பாவுக்கு?” தூக்கி வைத்தவாறே வீடு முழுவதும் நடந்தான்...
“அங்க பாருங்க நிலா..... நிலாவ பாப்பா தொடுறீங்களா?” வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்த உருண்டை விளக்கை நிலவாக்கினான், அதில் ஒளிரும் வெளிச்சத்தை நிலவொளி ஆக்கினான்... மெல்ல தாவி அந்த விளக்கை தொட்டபோது, நிலவையே தொட்டதை போல அழுகையை மறந்து சிரித்தாள் யாழினி.....
“ஐயா!! பாப்பா நிலாவ தொட்டாச்சு...!” மழலை மொழியில் பேசினான் விக்கியும்.... அதை பார்த்து மீண்டும் சிரித்தாள் யாழினி... ஒருவழியாக அவளை சிரிக்க வைத்த நிம்மதியில், களைத்துப்போய் இருக்கையில் அமர்ந்தான்....
தடம் புரண்ட ரயில் வண்டியை மீண்டும் நிமிர்த்தி, அதன் சக்கரங்களை ஆய்வு செய்துகொண்டிருக்கிறாள் யாழினி.... சில நிமிடங்களில் ரயில் சக்கரங்கள் மூலைக்கு இரண்டாக சிதறி ஓடியது.... சிரித்தபடியே அதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் விக்கி.... வாத்து பொம்மையின் மூக்கை கடித்தாள், அதன் பிளாஸ்டிக் வாசம் பிடித்திருக்கக்கூடும், இன்னும் முழு வீச்சோடு அதனை கடிக்க தொடங்கினாள்....
“பாப்பா... அதை கடிக்கக்கூடாது.... அது அசிங்கம், ‘உவ்வா’” முகத்தை அஷ்டகோணலாக்கி, பொம்மையை விக்கி பிடுங்க, கோபத்தில் அழுவதற்கு தயாரானாள் யாழினி.... அழுகை வரும் சமிஞ்சை கிடைத்த மறுநொடியில், மீண்டும் நிலா விளையாட்டுக்கு தூக்கி சென்றுவிட்டான் விக்கி....
மதியம் சாப்பிட்டவுடன் யாழினி ஒரு குட்டித்தூக்கம் போடுவாள், அதனால் மதிய சாப்பாட்டை பன்னிரண்டு மணிக்கே ஊட்ட தொடங்கினான் விக்கி... ஒரு வாய் ஹாலில் ஊட்டப்பட, அங்கிருந்து படுக்கையறைக்கு ஓடுவாள்... மறுவாய் படுக்கையறையில் ஊட்டப்பட, அது சமையலறையில் துப்பப்படும்.... பொறுமை இழந்த விக்கி, கொஞ்சம் மிரட்டி அருகில் அமரவைத்தவாறே, மீதி சாப்பாட்டை ஊட்டிவிட்டான்... ஏனோ அவள் அழுகையை மறந்து  வெள்ளை கரடி பொம்மைக்கு, சிவப்பு சாயம் பூசுவதில் தீவிரமாக இருந்தாள் யாழினி...
ஒருவழியாக சாப்பாட்டை முடித்த கையேடு, அவளை படுக்கையில் கிடத்தி உறங்க வைப்பதில் தீவிரமானான் விக்கி... அந்த நேரத்தில் அலைபேசி அழைக்க, மறுமுனையில் வருண்....
“என்ன பண்றா யாழினி?”
“அவ நல்லா சாப்ட்டு நிம்மதியா படுத்திருக்கா... ஒன்னும் கவலைப்பட வேணாம்...”
“அதுக்குள்ளையும் சாப்டாளா?... சாப்பிட்ட உடனே படுக்க வச்சிடாத, கொஞ்சம் முதுகை தட்டிவிடு... இல்லைனா வாமிட் பண்ணிடுவா... தூங்கும்போது டயாபர் மாட்டிவிட்டுடு, இல்லைனா பெட் ஈரமாகி கஷ்டப்படுவா.... அப்புறம்...”
“அது எல்லாம் எனக்கு தெரியும் வருண்... நீ கொஞ்சம்...” சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, யாழினி சாப்பிட்டதை லேசாக வாந்தி எடுத்தாள்.... பதறிப்போய், அழைப்பை துண்டித்துவிட்டு அவளை தோளில் போட்டு, நன்றாக முதுகை தட்டிக்கொடுத்தான் விக்கி.... “இன்னும் கொஞ்சம் பிசைந்து கொடுத்திருக்கனுமோ?” மனதில் குழப்ப எண்ணங்கள் ஓடின.... தூக்கக்கலக்கத்தில் அவளால் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க முடியாமல் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்...
இப்போது அவன் ‘டயாபர்’ மாட்டிவிட வேண்டும்... எது மேல்? எது கீழ்? எப்படி மாட்டிவிட வேண்டும்? ஒன்றும் புரியவில்லை... வருணை அழைக்கலாமா? வேண்டாம்....
உடனே எழுந்து, கணினி முன் அமர்ந்து கூகிள் தேடலில் “டயாபர் மாற்றுவது எப்படி?” தேடினான்....
ஒருவழியாக படித்த அரைகுறை விஷயங்களை வைத்து, அவளுக்கு மாட்டியும் விட்டான்....
“ஷப்பா!!!!” பெருமூச்சு விட்டு கட்டிலில் சாய்ந்தான்.... காலை முதல் இன்னும் சாப்பிடவில்லை, காபி குடிக்கவில்லை, காலைக்கடன்களை கூட முடிக்கவில்லை... மெல்ல எழுந்து அசதி மிகுதியான உடலோடு குளியலறைக்குள் சென்றான்... ஒருவாறாக தன் வேலைகளையும் முடித்து சாப்பிட்டு யாழினியின் அருகில் படுத்தான்.... அழகாக உறங்கிக்கொண்டு இருக்கிறாள், வாத்து பொம்மையின் மூக்கை வாயில் வைத்தவாறே.... “அழுத்தக்காரி... அவ அப்பனை போலவே!”.... வாத்து பொம்மையை மெல்ல, அவளிடமிருந்து எடுத்து, கட்டிலுக்கு அடியில் தூக்கி வீசினான்... யாழினியை தட்டிக்கொடுத்தவாறே, தூங்கிப்போனான் விக்கி....
“டாடி..... வூன்ங்..... வூங்... டாடி” யாழினியின் குரல்தான்.... அழுகிறாள்!... கவனா? நிஜமா?.... தூக்கம் களைந்து படுக்கையை விட்டு எழுந்தான், அருகில் யாழினியை காணவில்லை... அழுகை சத்தம் ஹாலில் கேட்கிறது... பதட்டத்தோடு எழுந்து சென்றான், பால்கனியின் சுவற்றருகே அமர்ந்து தலையில் கைவைத்தவாறே அழுதுகொண்டு இருக்கிறாள் யாழினி... ஓடிப்போய் அவளை தூக்கி கைகளை விலக்கி பார்க்க, நெற்றியின் இடது பக்கம் புடைத்துப்போய் காணப்பட்டது....
பதறிப்போனான் விக்கி...
“அழாதிங்க குட்டி.... அழக்கூடாது.... யார் அடிச்சா பாப்பாவ?” கண்களை துடைத்துவிட்டு, தோளில் சாய்த்து சமாதானப்படுத்தினான்....
சுவற்றை கை காட்டிய யாழினி, “அச்சு... அச்சு...” மழலை மொழியில் சொன்னாள்....
“அந்த சுவரா?... நல்லா அடிச்சிடலாம்....” அருகில் இருந்த ஒரு புத்தகத்தை சுருட்டி கையில் வைத்து, “பாப்பாவை அடிப்பியா? பாப்பாவை அடிப்பியா?” என்றவாறே விளையாட்டாய் அடித்தான் சுவற்றை.... அழுகை மறந்து அதை பார்த்து ரசித்த யாழினி, “அல்லா அடி... அல்லா அடி...” என்றாள்...
“இனிமே இந்த சுவத்தோட பாப்பா ‘டூ’ விட்ருங்க.... இனி இந்த பக்கம் வரக்கூடாது பாப்பா” ஏதோ சொல்லியவாறே யாழினியை தூக்கிக்கொண்டு பால்கனி வழியாக வெளியுலகை வேடிக்கை பார்க்க தொடங்கினான் விக்கி....
வருண் வருவதற்குள், அரைகுறையாக அவசர அவசரமாக யாழினி குளிக்கவைக்கப்பட்டு, பவ்டர் பூசப்பட்டு அமைதியாக உட்காரவைக்கப்பட்டாள்...  இருபத்தி இரண்டு பொம்மைகளுக்கு மத்தியில், இருபத்து மூன்றாவது பொம்மையாக யாழினியும் அமர்ந்து தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்... தொலைக்காட்சியில் வாத்து பேசுகிறது, மீன் நடக்கிறது, சிறுத்தை பறக்கிறது.... சிரித்தபடியே ரசித்துக்கொண்டு இருக்கிறாள் யாழினி, அவளருகில் அமர்ந்து யாழினியின் உடை பொத்தான்களை மாட்டிவிட்டுக்கொண்டு இருக்கிறான் விக்கி....
சில நிமிடங்களில், கதவை திறந்து உள்ளே நுழைந்தான் வருண்...
“இது நம்ம வீடுதானா?... கட்சி கூட்டம் முடிந்த தீவுத்திடல் போல அல்லவா  இருக்கிறது!” உள்ளே நுழைந்த வருண் கொஞ்சம் ஸ்தம்பித்துதான் போனான்... வீட்டின் தரை முழுவதையும் பொம்மைகள் ஆக்கிரமித்து கிடக்க, நடுவில் அமர்ந்திருக்கும் யாழினி வருணை பார்த்ததும் சிரித்தபடியே அவனருகில் நடந்து வந்தாள்.... ஈரத்தோடு பூசப்பட்ட பவுடர் முகத்தில் சுண்ணாம்பாக பூசப்பட்டிருக்கிறது,, காது ஓரங்களில் முழுமையாக கழுவப்படாத சோப் ஒட்டியிருக்கிறது... தலை கீழாக மாட்டப்பட்ட ‘டயாபர்’, வரிசை தப்பி மாட்டப்பட்ட சட்டை பொத்தான்கள்...  நன்றாக கவனித்தபோதுதான், நெற்றியின் வீக்கத்தை கவனிக்கிறான்... பதறிப்போய் தூக்கி, நெற்றியை தேய்த்துவிட்டான், வலியால் யாழினி சிணுங்க, தூக்கி சமாதானப்படுத்தியவாறே வீட்டிற்குள் நடந்தான்.... தரையில் கால் வைக்க முடியாத அளவுக்கு பிசுபிசுப்பு.... காலை கொடுத்த பாலும், மதியம் ஊட்டிய சாதமும் இன்னும் மிச்ச சொச்சங்களாக தரைகளை இறுக்கமாக பிடித்திருக்கின்றன.....
ஹாலின் சோபாவில் அமர்ந்து வருணின் பார்வையை தவிர்க்க முயன்ற விக்கி, கீழே குனிந்தபடியே தனக்கு தொடர்பே இல்லாத மருத்துவ புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருந்தான்.... தனக்குள் சிரித்தபடியே யாழினியை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று, ஐஸ் கட்டிகளை துணிகளில் சுற்றி நெற்றியில் ஒத்தடம் கொடுத்தான் வருண்.... மழலை மொழியில் யாழினியுடன் பேசிக்கொண்டே, ஒத்தடம் வைத்ததால் அவள் வலியை உணரவில்லை....
“யாழி குட்டி, என்ன சாப்டிங்க?”
“சோது சாப்தேன்...”
“நல்லா விளையாண்டுச்சா குட்டி?”
“ஆமாப்பா... நிலா தொத்தேன்... டாடி தொத்துச்சி”
“அப்டியா!... வெரி குட் குட்டி...”
ஹாலில் இருந்து உள்ளே நடக்கும் நிகழ்வுகளை கவனித்த விக்கி, உள்ளே மட்டும் செல்லவில்லை... சில நிமிடங்களில் ஹாலில் யாழினியை கொண்டுவந்துவிட்ட வருண், “டாடி கிட்ட இருங்க குட்டி, நான் போய் குளிச்சுட்டு வரேன்” என்றவாறே குளியலறைக்குள் நுழைந்தான்...
இரவு உணவு முடிந்து, படுக்கையில் படுக்கும்வரை விக்கி வருணுடன் எதுவும் பேசவில்லை... வருணும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை....
யாழினி நடுவில் படுத்திருக்க, இருபக்கமும் வருணும் விக்கியும் படுத்திருக்கின்றனர்.... வருண் சொல்லும் கதையில், “ஏழு மலை தாண்டி, ஆறு கடலை அந்த ராஜா தாண்டுவதற்கு” முன்பே யாழினி தூங்கிவிட்டாள்....  போர்வையை அவள் மீது போர்த்திவிட்டு, அருகில் இருந்த புத்தகத்தை புரட்ட தொடங்கினான் வருண்....
“வருண்....” வார்த்தை வெளிவர தயங்கி, சத்தம் குறைந்து வெளிப்பட்டது....
“என்னடா?... சொல்லு...” கையில் வைத்திருந்த ‘காகித சங்கிலிகள்’ புத்தகத்தை மூடி அருகில் வைத்தவாறு கேட்டான் வருண்...
“நான் நாளைக்கு ஜாப் போறேன்... நாளைலேந்து நீயே பாத்துக்கோ யாழினியை”
“ஏண்டா? என்னாச்சு?... ரெண்டு நாள் கணக்கு நாளை வரைக்கும் இருக்கே?”
“இருக்குத்தான்... ஆனால், வேணாம்... அல்ஜீப்ராவை விட குழந்தை பராமரிப்பு கொஞ்சம் சிக்கல் தான்... யாழினியை வச்சு ட்ரயல் பார்க்க நான் விரும்பல... இன்னிக்கு கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா, தலைல அவளுக்கு பெரிய அடி பட்டிருக்கும்... எனக்கு உயிரே இல்லடா” யாழினியின் முன் நெற்றி முடியை நகர்த்திவிட்டு, காயம் பட்ட இடத்தை தொட்டுப்பார்த்தான் விக்கி...
“இதல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியும்டா... அதனாலதான் நாளைலேந்து எனக்கு parental leave ஒரு வருஷத்துக்கு அப்ளை பண்ணிருக்கேன்.... இங்க நம்மள மாதிரி கே பேரன்ட்ஸ்’க்கு குழந்தை பாத்துக்க லீவ் கொடுக்கணும்னு சட்டம் இருக்கு... இன்னிக்கு காலைல குழந்தைய தனியா விட்டுட்டு போகும்போதே நான் அந்த முடிவை எடுத்துட்டேன்....”
“என்மேல நீ அவ்ளோ நம்பிக்கை இல்லாம இருந்திருக்கியா?... குழந்தையை என்னால பாத்துக்க முடியாதுன்னு அவ்ளோ உறுதியா நம்புனியா?” அப்பாவியாக கேட்டான் விக்கி....
“நான் குழந்தைன்னு சொன்னது உன்னைத்தான்... யாழினி விவரமானவ... தலைல லேசா அவளுக்கு வீக்கம் வந்ததுக்கே நீ இப்டி பதறிப்போய்ட்ட... ஐஸ் க்யூப் வச்சு நெத்தில ஒத்தடம் கொடுத்தாலே போதும்டா இதுக்கு... குழந்தை மாதிரி இதுக்கு இவ்ளோ பீல் பண்ற?” விக்கியின் தலைமுடியை கலைத்துவிட்டான்...
இதை கேட்டு சிரித்த விக்கி, பழைய உற்சாகத்தை மீண்டும் அடைந்தான்....
“நான் குழந்தையா?... ஆமா, இந்த குழந்தையை தான் ஒரு வாரம் பட்டினி போட்டுட்டியே?” சினுங்கினான்....
“அடப்பாவி... கொஞ்சம் பாவம் பார்த்தா நீ இவ்வளவு பேச ஆரமிச்சுட்ட.... யாழினி படுத்திருக்கிறது தெரியுதா இல்லையா?” சிரித்தான் வருண்....
“யாழினி நல்லா தூங்கிட்டா... இப்போ அவ ஆறாவது கடல் தாண்டி, ஏழாவது கடல்ல மீன் புடிச்சுகிட்டு இருப்பா”... இரவு வெகுநேரம் நீண்ட சிரிப்பு சத்தங்களுக்கு மத்தியில், நிசப்தமாக மீன் பிடித்துக்கொண்டு இருந்தாள் யாழினி...
                                         *************************************
நாட்கள் வேகமாக உருண்டோடியது....
யாழினி மூன்று வயதை எட்டிவிட்டாள்... இப்போது சில நாட்களாக பள்ளிக்கும் செல்ல தொடங்கிவிட்டாள்....
யாழினி ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்துவிட்டாள், மழலை மொழி கொஞ்சம் மாறிவிட்டது... தெளிவான உச்சரிப்பு... அடிக்கடி “ழகரம்” உச்சரிக்க தடுமாறும் டாடியை கிண்டல் செய்யும் அளவிற்கு தமிழ் அவள் நாவில் தாண்டவமாடியது... இப்போது படுக்கையில் படுத்திருப்பது யாழினியும் விக்கியும் மட்டும்தான்...
“தூங்குங்க குட்டி... நாளைக்கு ஸ்கூல் போகணும்ல?” போர்வையை போர்த்திவிட்டு தூங்கிட நிர்பந்தித்தான் விக்கி...
“அப்பா கதை சொல்லட்டும் டாடி... அப்போதான் தூக்கம் வரும்...”
“உங்க அப்பாவுக்கு நாளைக்கு எக்ஸாம்... அதான் ஹால்ல படிச்சுட்டு இருக்கான்... படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்காம, இப்போ விழுந்து விழுந்து படிக்கிறான்” ஹாலில் அமர்ந்திருக்கும் வருணுக்கு கேட்டிடாதபடி மெல்ல கூறிவிட்டு, சிரித்தான்...
“அப்போ நீங்க சொல்லுங்க டாடி... கதை கேட்டாத்தான் எனக்கு தூக்கம் வரும்...”
“சரி சரி... இரு சொல்றேன்.... பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா?”
“தெரியாது டாடி... சொல்லுங்க...” கதை கேட்க ஆர்வமாக முகத்தை விக்கியின் பக்கம் திருப்பினாள் யாழினி....
“இந்த கதை கூட சொல்லாம உங்கப்பா இவ்வளவு நாள் என்ன கதை விட்டிருக்கான்னு தெரியல... இனிமே பாப்பாவுக்கு நான்தான் கதை சொல்வேன் தினமும்...”
“சரி டயலாக் பேசாம கதை சொல்லுங்க டாடி”
“வானத்துல இருக்குற நிலாவுல ஒரு பாட்டி வடை சுட்டுச்சாம்....”
இடைமறித்த யாழினி, “நிலாவுல எப்டி டாடி பாட்டி மூச்சு விட முடியும்?”...
“அது... அது... அந்த பாட்டி ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டி இருந்துச்சாம்... கதையை கேளு குட்டி...”
“சரி சொல்லுங்க....”
“ஒவ்வொரு வடையா பாட்டி சுட்டுகிட்டு இருந்தப்போ....”
“நிலாவுல எப்டி டாடி அடுப்பு எரியும்?.. அங்கதான் ஆக்சிஜன் இல்லையே?”
“அய்யய்யோ... நீ சும்மா விடமாட்ட போல... அது எலக்ட்ரிக் இண்டக்சன் ஸ்டவ்... அதுலதான் வடை சுட்டுச்சு.... அந்த வடையை காக்கா ஒன்னு தூக்கிகிட்டு போயிடுச்சாம்....”
“அந்த காக்காவும் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டி இருந்துச்சா டாடி?”
“இல்ல... அது ஆக்சிஜன் பத்தாம அப்டியே செத்து விழுந்துடுச்சு... அத்தோட கதையும் முடிஞ்சுடுச்சு... நீ பேசாம தூங்கு குட்டி” கொஞ்சம் கோபமாகத்தான் கூறினான்...
விக்கியின் கோபத்திற்கு காரணம் புரியாத யாழினி, அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள்...
அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த வருண், “டாடி கதை சொன்னானா குட்டி?... இனி தினமும் அவன்தான் கதை சொல்லபோறதா சொன்னானே?.... சொல்லட்டும் சொல்லட்டும்... நானும் கேட்க ஆசையாத்தான் இருக்கேன்” சிரித்தான்...
“டேய், கிண்டலா?... இப்டி காலங்காலமா சொல்லப்பட்ட இந்த கதைகள்லயே யாழினி இவ்வளவு லாஜிக் பாக்குறாலே, அப்போ இவ்வளவு நாள் நீ என்னதான் சொன்ன?” நிஜமாகவே குழப்பத்தில்தான் கேட்டான் விக்கி....
“அதுக்குத்தான் நீ நாவல் படின்னு சொன்னா நீ கேட்க மாட்ற... பொன்னியின் செல்வன் மாதிரி நாவல்தான் இவ்வளவு நாளும் சொன்னேன், அடுத்து கடல் புறா சொல்ல போறேன்.... இனிமே நீயும் கேளு... நம்ம யாழினி மத்த குழந்தைகளை விட அட்வான்ஸா போறாடா....”
இப்படி மற்ற குழந்தைகளை விட வித்தியாசமாக செல்லும், யோசிக்க தொடங்கி இருக்கும் யாழினி அடுத்தடுத்த வயதுகளில் கேட்ட கேள்விகள் கொஞ்சம் சிக்கலானவை தான்....
ஐந்து வயதில், “எனக்கு அம்மா இல்லையாப்பா?... எனக்கு மட்டும் எப்டி ரெண்டு அப்பா?”
பத்து வயதில், “அம்மா இல்லாம நான் எப்டி பிறந்தேன்?... அப்டினா என்னை நீங்க அடாப்ட் பண்ணிங்களா டாடி?”
பதினைந்து வயதில், “என்னோட நிஜ அப்பா அம்மா யாருப்பா?... எதுக்காக என்னைய தட்தெடுத்திங்க?”
இந்த கேள்விகள் அனைத்தும் முள் மேல் விழுந்த சேலையை போன்றது, பதில்களில் கொஞ்சம் தடுமாறினாலும் பாதிப்புகள் என்னவோ மொத்த குடும்பத்துக்கும் உண்டு.... சில பதில்கள் அவள் வயது கருதி, நாட்கள் கடந்து சொல்லப்பட்டன... சில பதில்கள், அவள் கேள்விகளை யோசிக்கும் முன்னரே சொல்லப்பட்டு விட்டது... ஆனால், எல்லா விஷயங்களும் அவளுக்கு தெளிவாக உணர்த்தப்பட்டது...
“யாழினி பாவம் வருண்... கொஞ்ச நாளா அவள் மன ரீதியா அழுத்தத்துல இருக்கா... நம்ம மாதிரி ஆளுங்களோட பிள்ளைகள் படிக்குற ஸ்கூல்’ல விடலாமே?... தேவைப்பட்டா கவுன்சிலிங் கொடுக்கலாமே?...”
“இல்ல விக்கி... இப்போ அவ குழப்பத்துல இருக்கிறது தெரியுது... மத்த பிள்ளைகளோட இப்போ அவ இருக்குறதுதான் நல்லது... நிறைய கேள்விகளை அவ தனக்குள்ளையும், நம்மகிட்டையும் கேட்கட்டும்.... அப்போதான் அவ தெளிவான மனநிலைக்கு வரமுடியும்... கேள்வி கேட்கவே வாய்ப்பில்லாத இடத்துல அவ வளர்ந்தா, நிச்சயம் அவளால நம்ம உண்மையான பாசத்த உணர முடியாது.... இப்போ கவுன்சிலிங் தேவைப்படுறது அவளுக்கு இல்ல, உனக்குத்தான்... நிம்மதியா இருடா, அவ நம்ம யாழினி...”
வருண் சொன்னதை போல நிறைய குழப்பங்களை யாழினி சந்தித்தாள்... உடன் படிக்கும் பிள்ளைகள், “யாழினிக்கு ரெண்டு அப்பாவாம்... அவ எப்டி பொறந்திருப்பா?” என்று கிண்டலாய் பேசும் பேச்சுக்களால் ஒவ்வொரு நாளும் மனமுடைந்து போவாள்... அந்த கோபத்தை சில நேரம் பெற்றோரிடம் காண்பிப்பாள்.... அந்த இறுக்கமான நிலைமை வெகுவிரைவாகவே, தளர்ந்து போனது... அந்த குழம்பிய நீர் தெளிவாகிய நாளில், அந்த கேள்விக்கு அவள் தோழிகளிடம் பதில் சொன்னாள்....
“ஆமா... எனக்கு ரெண்டு அப்பாதான்.... சிவனுக்கும், திருமாலுக்கும் மகனா பிறந்த ஐயப்பன் நீங்க கும்பிடும் கடவுள் தானே?... அப்போ முதல்ல நீங்க கும்பிடுற அந்த கடவுளையும் கிண்டல் செய்யுங்க”  இதற்கு பதில் யாரும் பேசவில்லை... அதற்கு பிறகு அது தொடர்பான கேள்விகளையும் அந்த தோழிகள் கேட்கவில்லை...
அவளுடைய பத்தொன்பது வயது வரை யாழினி குழந்தையாகத்தான் வருணுக்கும் விக்கிக்கும் தெரிந்தாள்... தான் குழந்தை அல்ல, தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் அளவுக்கு அவள் வளர்ந்துவிட்டதை தன் பெற்றோருக்கு ஒருநாள் உணர்த்தியும் காட்டிவிட்டாள்...
“என் கூட படிக்குற பையனை நான் லவ் பண்றேன்.... அவனும் லவ் பண்றான்” பட்டாசாக பேசும் யாழினி, இதை மட்டும் தயங்கியபடியேதான் கூறினாள்....
“அடடே!... யாழினி குட்டி பெரிய ஆளா ஆகிட்டா போல!... உன் செலக்சன் நிச்சயம் தப்பா இருக்காது.... பையன் எந்த ஊருடா” யாழினியின் கன்னத்தை கிள்ளியபடியே கேட்டான் விக்கி...
“அவனும் இந்தியன்தான் டாடி... அவன் அப்பா தமிழ், அம்மா குஜராத்தி...”
“அட சூப்பர்... மாப்பிள்ளையும் நம்ம ஊர்தானா?... அப்போ பிரச்சினையே இல்ல... ஆனால், ஒரே ஒரு கவலை தான் குட்டி...”
“என்ன டாடி?”
“ரொம்ப சீக்கிரமே எங்க ரெண்டு பேரையும் நீ கிழவனா ஆக்கிட்ட.... இப்போதான் கனடா வந்த மாதிரி இருந்துச்சு, அதுக்குள்ள எங்கள தாத்தாவாக்க பாக்குற!” யாழினியும் விக்கியும் சிரிக்க, வருண் மட்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாக அப்படியே நின்றான்...
வருணின் யோசிப்பை கவனித்த யாழினி, குழப்பம் நிறைந்த கண்களோடு, “என்னப்பா ஒரு மாதிரி நிக்குறீங்க?... ஏன் நீங்க எதுவும் சொல்லல?” வருண் அருகே வந்து அவன் கைகளை பிடித்தபடி கேட்டாள்....
“இல்லடா... இதுல அவசரப்பட்டு நான் முடிவெடுக்க விரும்பல.... முதல்ல, நான் அந்த பையன்கிட்ட பேசனும், அப்புறம் அவன் உனக்கு தகுதியானவன்னு நான் நம்பனும்... அப்புறம்தான் மத்த விஷயங்கள் எல்லாம்....” இதை மட்டும் சொல்லிவிட்டு மேற்கொண்டு யாழினியின் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் அறைக்குள் சென்றுவிட்டான்...
அறைக்குள் சென்ற வருணை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த யாழினி, கதவு சாத்தப்பட்ட “பட்...” சத்தத்தில்தான் நினைவுக்கு வந்தாள்.... அந்த நொடிப்பொழுதுக்குள் விக்கி, யாழினி அருகே வந்துவிட்டான்... அவன் முகத்தில் அப்பட்டமாய் வெளிப்பட்ட குழப்பத்தை மறைக்கும் விதமாக, பொய்யாக சிரித்தபடி, “அவன் எப்பவுமே இப்டிதான் யாழினி.... நீ வேணும்னா பாரேன்...” வாக்கியத்தை முடிப்பதற்குள், இடைபுகுந்த யாழினி, “சமாளிக்காதிங்க டாடி.... நான் அப்பா கிட்டேந்து இதை சத்தியமா எதிர்பார்க்கல.... அப்போ நான் சரியானவனை தேர்ந்தெடுக்க மாட்டேன்னு அவர் நினைக்குறாரா?... எனக்கு தகுதியானவனா இருக்கணும்னா, எந்த விதத்துல?... சாதி, மதம் சொல்றாரா?... இல்ல, பணத்தை சொல்றாரா?.... முற்போக்குத்தனம் பேச்சில மட்டும் இருக்க கூடாது, செயல்லையும் இருக்கணும்” சொல்லி முடித்த வேகத்தில், கண்களில் அரும்பிய நீரை விக்கி பார்த்திடாமல் தவிர்க்கும் பொருட்டு, வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்....
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த விக்கி, விபரீதத்துக்கான காரணம் புரியாமல் குழம்பினான்.... வருண் சென்ற அறைக்குள் சென்றான்... கதவை திறந்தான், கட்டிலில் அமர்ந்து புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறான் வருண்... புரட்டும் புத்தகத்தின் தலைப்பு “பெரியாரின் பெண்ணிய விடுதலை சிந்தனை”.... அந்த புத்தகத்தை படிக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் அதை பார்க்கவும் கூட இல்லை... ஒரு தடுமாற்றத்தை தடுக்க, பிடிமானமாய் புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறான்....
அருகில் சென்று அமர்ந்த விக்கி, “படிக்குறது பெண்ணிய விடுதலை பற்றி... ஆனால், மகளோட திருமணத்துல கூட அவளுக்கு உரிமை கொடுக்க மறுக்குற சராசரி அப்பா....” என்றான்...
புத்தகத்திலிருந்து முகத்தை எடுக்காமல் வருண், “நீயும் அப்டிதான் நினைக்குறல்ல?... நான் இப்போ பெண் விடுதலையை மறுத்து என்ன செஞ்சேன்?”
“என்ன செய்யல நீ?.... தகுதியானவனா இருக்கணும்னு சொன்னா, என்ன தகுதி பையனுக்கு இருக்கணும்?... சாதி, மதம், பணம்... இதுவா?”
“இல்ல குணம்...”
“யாழினி நல்ல குணமுள்ள ஒருத்தனை தேர்ந்தெடுத்துருக்க மாட்டாள்’னு நினைக்குறியா?”
“அப்டி சொல்லல... ஆனால், அந்த பையன்கிட்டையும், அவன் குடும்பத்து ஆளுங்ககிட்டையும் சில விஷயம் முதல்ல நாம பேசனும்.... அவ ஒரு கே பேரன்ட்ஸ்’ஓட மகள்’னு அவங்களுக்கு இன்னும் தெரியாது.... தெரிஞ்சா, அதை ஏத்துப்பாங்களான்னு தெரியல... கனடா’ல வாழ்ந்தாலும், அவங்க இந்தியர்கள்... கலாச்சாரம்’னு ஒரு பொய்யான பிம்பத்துக்கு பின்னாடி போறவங்க.... அதனால, யாழினியை அவங்க எப்டி பார்ப்பாங்கன்னு தெரியல... ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம், எதாச்சும் காரணத்தால யாழினி நம்மள பாக்க கூடாதுன்னு சொல்லிட்டா, அதை உன்னால ஏத்துக்க முடியுமா?... இது மகளோட வாழ்க்கைடா, நம்ம கே வாழ்க்கையால அவ எந்த விதத்துலையும் பாதிக்கப்பட கூடாது... அதனாலதான் அவங்ககிட்ட பேசனும்னு சொல்றேன்”
சொல்லி முடிப்பதற்குள், பாதியாக திறந்திருந்த கதவை “படார்” என்று திறந்து உள்ளே வந்த யாழினி, வருணை கட்டிப்பிடித்தாள், “சாரிப்பா...”... வேறு எதுவும் சொல்லவில்லை... சில நிமிட நிசப்தம் அங்கு தேவைப்பட்டது... அடைக்கப்பட்ட தொண்டைக்குழி விடுபட்டு, கண்களின் நீர் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு, வருணை விட்டு மெல்ல விலகி நின்று, அவன் முகத்தை பார்த்த யாழினி, “அதல்லாம் நான் பேசிட்டேன்பா... எல்லாத்துக்கும் அவங்க ஓகே தான்... உங்க ரெண்டு பேரையும் தவிர்த்துட்டு என்னால மட்டும் எப்டிப்பா இன்னொரு வாழ்க்கை வாழமுடியும்னு நினைக்குறீங்க?.... உங்க மனசை கொஞ்சம் சங்கடப்படுத்தினாலும், அது எப்பேற்பட்ட வாழ்க்கைனாலும் தூக்கி எறிஞ்சிடுவேன்... நீங்க ரெண்டு பேரும் என் உயிர்.... நான் உங்க தேவதைப்பா...” முதிர்ச்சியான பேச்சானாலும், இப்போது முதன் முதலில் கைகளில் ஏந்திய இரண்டு வயது “குட்டி” யாழினியாய் அவள் மாறியதாக தோன்றியது... (முற்றும்)