Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 31 December 2013

“என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.....!” – சிறுகதை...

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.....!” – சிறுகதை...

“அஷோக் சார், இந்த கொட்டேஷனை கொஞ்சம் எடிட் பண்ணி தரீங்களா?... ரொம்ப குழப்பமா இருக்கு சார்...” மாலினி இப்படி கேட்டு அருகில் வந்து நின்றபோது, மனதிற்குள் அந்த தருணத்தை ரசித்தபடியே மென்மையாக சிரித்தான் அஷோக்...
“இதுகூட பண்ண மாட்டேனா உங்களுக்காக... இது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மாலு, லாஸ்ட் இயர் வால்யூவை கம்பேர் செஞ்சு ப்ரைஸ் அப்டேட் போட்டா போதும்... இங்க பாருங்க...” என்றபடி தன் கணினியில் சில வித்தைகளை அஷோக் காட்ட, அவன் பின்பு குனிந்தவாறு நின்று அதை கவனிக்க தொடங்கினாள் மாலினி... அதுவரை குறுகியபடி அமர்ந்திருந்த அஷோக், தன் தோள் மாலினியின் மார்போடு உரசுவதற்கு ஏதுவாக அப்போதுதான் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தான்... அவ்வப்போது கணினியின் “என்டர்” பட்டனை தட்டும்போதேல்லாம், காரணமே இல்லாமல் அவன் தோள் குலுங்கிய காரணத்தை மாலினி அறிந்திருக்கவில்லை....
“ரொம்ப தாங்க்ஸ் சார்...” சொல்லிவிட்டு மாலினி செல்லும் முன்பு கொடுத்த கையை சில நொடிகள் தடவியபடி விடைகொடுத்தான் அஷோக்....
“தாங்க்ஸ் மட்டும்தானா மாலு?” ஆயிரம் அர்த்தங்கள் பொதிய கேட்டான்...
“வேற என்ன சார் வேணும்?.. நியாயமா உங்களுக்கு என் சாலரி’ல பாதி கொடுக்கணும், அந்த அளவுக்கு என் வேலைகள்ல பாதிய நீங்கதான் செய்றீங்க... ஹ ஹ ஹா...” குலுங்கி சிரித்தாள் மாலினி...
“ரொம்பவல்லாம் ஒண்ணுமில்ல மாலு, இந்த வீக்கெண்ட் டேட் வேணும்.... அவ்ளோதான்...” சிரித்தான்...
“ஹ ஹ ஹா.... போங்க சார்...” ஆறு முறைகளை தொடர்ந்து, ஏழாவது முறையாகவும் இந்த கேள்விக்கு சிரித்தே மழுப்பிவிட்டாள் மாலினி... அந்த அலுவலகத்தில் அஷோக் தொட்டு துளங்காத ஒரே பெண் அவள் மட்டும்தான்... அழகான சிரிப்பு, தெளிவான தோற்றம், எப்போதும் பட்டாம்பூச்சியை போன்ற துறுதுறுப்பு... மாலினியின் மீது பித்தாய் அஷோக் மட்டுமல்ல, இன்னும் சில யுக புருஷர்களும் அந்த அலுவலகத்தில் காத்துக்கிடக்கிறார்கள்...
மதிய உணவு இடைவேளையில், சப்பாத்தியை பிய்த்து வாயில் வைத்தவாறே, அன்றைய மாலினியுடனான உரசலுக்கு, கண் காது மூக்கு வைத்து கதை அளந்துவிட்டான் அஷோக்...
“ரொம்ப சிம்பிளான கொட்டேஷன்டா... அதை புரியாத மாதிரி என்கிட்ட கேட்க வந்து என் பின்னாடி வந்து நின்னு உரசுனா மச்சி...”
“ஐயோ செம்மடா.... அப்புறம்?” இப்படி கதை கேட்டே காதோரத்தில் நரை பூக்கும் அளவிற்கு நாட்களை கடத்திவிட்ட சீனியர் அலுவலர் ராமு எதை சொன்னாலும் நம்பிடும் ஒரு “பச்சை குழந்தை”...
“அதை சரி பண்ணி கொடுத்திட்டு என் வேலையை பார்க்குறப்போ, இந்த வீக்கெண்ட் டேட்டிங் போலாமா?’னு கேட்குறா... டைம் கிடச்சா போகலாம்னு சொல்லிட்டேன்...”
“உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு மச்சி... இதுவரைக்கும் ஷைலு, வினோ, அம்மு... இப்போ மாலு... எல்லாமே செம பிகர்டா.... ஆமா, என்னாச்சு வித்யா விஷயம்?”
“ஹ்ம்ம்.... அது ஓவர் மச்சி... இந்த வாரம்தான், மகாபலிபுரத்துல அடிக்கல் நாட்டினேன்... இங்க பாரு...” என்று தன் அலைபேசியில் சில புகைப்படங்களை காட்ட, அதில் ஒரு பெண் கட்டிலில் அமர்ந்திருப்பதாகவும், உடை மாற்றுவதாகவும், கண் அடித்து சிரிப்பதாகவும் புகைப்படங்கள் வரிசை கட்டி நின்றன... விரித்த கண்களோடு ஆச்சரியமாக அவற்றை ராமு பார்க்கும் நேரத்தில், பெருமிதத்தில் மிதக்கத்தொடங்கினான் அஷோக்....
மாலை வேளையில் அலுவலகம் முடிந்து பைக்கில் தன் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வழியில் திடீரென வண்டியை நிறுத்தி, அலைபேசியை காதில் வைத்தான் அஷோக்.... அழைப்பு எதுவும் வராவிட்டாலும்கூட அந்த அலைபேசியை காதில் வைத்தவாறே மெல்ல தன் கண்களை சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பிறழ்ந்த ஒரு பெண் மீது படரவிட்டான்... இளம் வயது பெண்தான் என்றாலும், அழுக்கேறி கிடக்கும் அவள் உடை ஆங்காங்கே கிழிந்து இருக்கிறது... தன் கண்களை அவள் மீது ஊடுருவ செய்து, கிழிந்த ஆடைக்குள் அவள் அங்கங்களை அளவெடுத்தான்.... அவன் மட்டுமல்லாது அந்த “பார்வை கற்பழிப்புகள்” அங்கு பல ஆண்களால் நடந்துகொண்டிருப்பதை, ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து சென்றனர்... அவள் அங்கங்களை கண்களால் கபளீகரம் செய்துவிட்டு சில நிமிடங்களில் வீட்டையும் அடைந்தான்....
அந்த ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் பிளாட் இருக்கும் மூன்றாம் தளத்திற்கு செல்லும் முன்பு யாரையோ தரைத்தளத்தில் தேடினான்.... அஷோக்கை பார்த்ததும் ஒரு சிறுமி ஓடிவந்தாள், பதின்மூன்று வயதிருக்கலாம்.... வயதினை மீறிய அங்க வளர்ச்சிகள், அவள் ஓடி வரும்போது அப்பட்டமாக வெளிப்பட்டது....
“ஹாய் அஷோக் அங்கிள்...” என்றாள்...
தன் பைக்குள் வாங்கி வைத்திருந்த ஒரு சாக்லேட்டை அவள் கையில் திணித்துவிட்டு, கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு மாடியேற தொடங்கினான்... அந்த முத்தத்தில் எச்சிலோடு கலந்திருந்த விரசமான எண்ணங்களை, அந்த சிறுமி அறிந்திடாமல் அவள் வாங்கிடும் எழுபத்திரண்டாவது சாக்லேட் அது...
தன் பிளாட்டின் வெளியில் ஒரு பெண்ணும் ஆணும் பேசிக்கொண்டிருப்பதை கண்டதும், தன் நடையை வேகப்படுத்தினான் அஷோக்... அஷோக்கை பார்த்ததும் அந்த ஆண் மெல்ல அங்கிருந்து விலகி செல்வதை போல அவனுக்கு தோன்ற, அங்கு நின்ற பெண் அருகில் சென்றதும், “யார் அவன்?” என்றான்....
“பக்கத்து பிளாட் ராஜேஷை தேடி வந்தாராம், ஆள் இல்லைன்னு நம்ம வீட்ல கேட்டாங்க...” கலக்கத்துடன் பதில் சொன்னாள்....
“உனக்கு ஆயிரம் தடவை சொல்லிருக்கேன், இப்டி எவன்கூடயும் பல்ல இழிச்சுகிட்டு பேசிட்டு இருக்காதன்னு... உள்ள போ....” என்று அதிர்ந்து சொல்ல, திடுக்கிட்டு நிதானித்த அவன் மனைவி தன் இயலாமையை நொந்தவாறு உள்ளே சென்றாள்...
குளித்து முடித்து, சூடாக காபியை அருந்திவிட்டு அறைக்குள் சென்றான் அஷோக்... அப்போதுதான் இறுக்கம் களைந்த அவன் மனைவி சீரியல் பார்ப்பதற்கு ஆயத்தமானாள், அவள் முகத்தில் “நாதஸ்வரம்” மலரை பற்றிய கவலை குடிகொண்டிருந்தது....
அறைக்குள் சென்று கதவை மூடிய வேகத்தில் கணினியை திறந்து, செக்ஸ் வீடியோக்கள் நிறைந்து கிடக்கும் ஒரு தளத்தில் “கேங் ரேப் (gang rape)” என்று வீடியோக்களை தேடினான் அஷோக்... அதில் ஒரு பள்ளி மாணவியை நான்கு பேர் கற்பழிக்கும் வீடியோவை டவுன்லோட் செய்தான்.. அந்த காணொளி டவுன்லோட் ஆகிக்கொண்டிருக்கும் கால இடைவெளிக்குள், தன் பேஸ்புக் பக்கத்தை திறந்தான்....
சில நொடிகள் யோசித்துவிட்டு, அன்றைய பேஸ்புக் ஸ்டேட்டசை மிகுந்த அக்கறையோடும், சமூக பொறுப்போடும் பதிவு செய்தான் அசோக்...
“ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அங்கீகரிக்க போகிறார்களாம்...
நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் இந்த செயல்களுக்கு ‘மனித உரிமை’ என்று பெயராம்....
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?”... (முற்றும்)

Saturday 28 December 2013

“1008 பிரச்சனைக்கு நடுவில் 377...” – கண்ணகி இளமலர்...

கஜராஹோ சிற்பக்காட்சி


11.12.13 அன்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தாக்கத்தில் நம் உரிமைகளுக்கான போராட்டம் ஒருபக்கம் வலுவடைந்து கொண்டு இருக்கிறது என்றாலும், நாட்டுநடப்பு ஏதும் அறியாமல் தேடி வந்த பாலின்ப நிறைவு கிடைத்தாலே போதும் என்று எண்ணும் ஒரு சிலரின் இடையே குழப்பத்துடன், தூக்கமின்றி, மகிழ்ச்சியின்றி, நிம்மதியின்றி உலா வரும் உயிர் ஆவிகளே பெரும்பான்மை என்பது மறுக்க முடியாத உண்மை…. ஓர்பால் ஈர்ப்பினர் மத்தியில் தற்கொலை எண்ணங்களை எளிதில் ஏற்படுத்தும் வலிமை கொண்ட  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை  எச்சரிக்க, ஆவிகளின் துணையை நாடுவது நமது கற்பனை கதைகளில் சாத்தியம் எனினும், நடைமுறையில் நம் சமூகத்தினரின் ஆவிகள் நீதிபதிகளை கேள்வி கேட்டார்களா? என்பது எவரும் அறியாத மர்மம்…. ஆவிகளைப்பற்றிய மர்மம் அல்ல, நிகழ்வுகளைப்பற்றிய மறைக்கப்பட்ட உண்மையும் மறுக்கப்பட்ட நீதியின் மர்மமும் தான் இந்த பதிவு….

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு சுமார் ஒரு மாதம் முன்னதாகவே சட்டத்தின் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தன் கடமையை செவ்வனே செய்தது…. ஆம், பிரிக்கப்பட்டது இராதா (வயது 20), இராணி (மாற்றப்பட்ட பெயர்கள்) இருவரின் காதல் மட்டுமல்ல  இராதாவின் உயிரும் தான்; எனினும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 இன் கீழ் அல்ல, Habeas corpus எனப்படும் ஆட்கொணர்வு ஆணையின் மேற்கோள் காட்டலின் துணையுடன் என்பது மேலும் அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல்….

குழந்தைப் பருவத்திலிருந்து தோழிகளாக பழகி வந்த இராதாவும் இராணியும் தங்களின் ஓர்பாலீர்ப்பை உணர்ந்து, காதலை வெளிப்படுத்தி, வாழ்க்கைத்துணையாக வாழும் விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தனர்…. வழக்கம் போல், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் இல்லற வாழ்வை துவங்க முற்பட்டனர்…. இராதாவின் பெற்றோர் காணாமல் போன தங்களின் மகளை  கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது மட்டும் அல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தனர்…. 

இதை தொடர்ந்து திண்டுக்கல் அருகே காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இராணி சமேத இராதா நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்…. சட்டவிரோதமான கைதுகளிலிருந்தும், முறைக்கேடான கைப்பற்றல்களிலிருந்தும் தனி மனித விடுதலையை காக்க வேண்டிய ஆட்கொணர்வு மனு, 18 வயது நிரம்பிய இருவரை அவர் விருப்பமின்றி பெற்றோர்களிடம் ஒப்படைக்க துணை நிற்கும் அவலம் நம் நாட்டில் தான் அதிகம். தேவையற்ற நெறிமுறைகளை கடைபற்றிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காதலர்களை பிரித்து பெற்றோர்களுடன் வழி அனுப்பி வைக்க உத்தரவிட்டது…. காவல் துறையினர் மற்றும் பெற்றோரின் கடிந்துரைகளுக்கு உள்ளான இராதா  மனச்சோர்வுடன் "இந்த சமூகத்தில் நான் பட்ட அவமானம் போதும். என் உயிர் தோழியை நான் மறக்க முடியாது…. அதனால் இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன்" என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் அறையில் தூக்கிலிட்டு உயிர் துறந்தார்….

இந்த செய்தியை தமிழ் ஊடகங்கள் பல வெளியிட முற்படவில்லை, வெளியிட்ட ஒரு சில நாளிதழ்களும் தங்கள் கற்பனை திறனில் ஆண்-பெண் காதல் திருமண முறிவின் தற்கொலை போன்ற கட்டுக்கதைகளை சித்தரித்தன…. அநீதியை களைய அவர்களின் எழுதுகோல்கள் ஒத்துழைக்கவில்லை…. ஒரு சில ஆங்கில நாளேடுகளும் பி.டி.ஐ (P.T.I) யின் முன்னவைக்கு இணங்கி இந்த நிகழ்வை செய்தியாக வெளியிட முயற்சித்தன…. இது போல் மாற்று பால்விருப்பு/பாலீர்ப்பு நிராகரிப்பினால் நிகழும் தற்கொலைகளின் உண்மை மறைக்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் வெளிவந்த செய்திகள் ஏராளம் என்பது பலர் அறிந்ததே…. நிகழ்ந்தனவை அனைத்தும் வரலாற்று ஏடுகளில் இடம் பெற வேண்டும் என்பதற்கான பதிவல்ல இது; கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும்  இருந்து நாம் எதிர்காலம் நோக்கி செல்ல கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்பதன் சிந்தனைச் சீண்டலாக அமைந்தால் அதுவே மாற்றத்தின் முதல் படி....



2013 ஜூலை மாதம், கேரளா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த சங்கமா மனித உரிமை பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் சட்டபூர்வ தலையீட்டால் சரண்யா (21), சுருதி (21) என்னும் இளம் பெண்கள் அவர்கள் விருப்பபடி பாதுகாப்புடன் வாழ நீதிமன்ற தீர்ப்பு உதவியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர்பாலீர்ப்பை குற்றமற்றது என்று அறிவித்து இருந்தால், ஒரு சில கொண்டாட்டங்களுடன் பல்வேறு பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும்.... “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுஎன்ற பழமொழி போல் புதன்கிழமை வெளிவந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல விடுபட்ட உரிமைகளைப் பெற சாத்தியங்களை வழி வகுத்துள்ளது என்றால் மிகை ஆகாது…. மேலே பதிவு செய்த நிகழ்வுடன் தொடர்புடைய சட்ட குளறுபடிகளை முதலில் நோக்குவோம்.... வீட்டை விட்டு வெளியேறும் 18 வயது நிரம்பிய பெண்கள் மீது ஆட்கொணர்வு மனுவை தொடுத்து பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் விருப்பமின்றி அனுப்பும் செயலை நீதிமன்றங்கள் தடை செய்ய வேண்டும்.... இது லெஸ்பியன் பெண்களுக்கான அடக்குமுறை மட்டும் அன்று குடும்பத்தினரின் எதிர்ப்பில் ஆண் பாலினரை மணக்க விரும்பும் பெண்ணையும் வீட்டில் அடக்கி ஆளும் முயற்சியாகும், ஆகவே இது பாலீர்ப்பு பாகுபாடின்றி பொது பெண்ணுரிமை பிரச்சனையாக பார்க்கப்படவேண்டும்....

ஓர்பாலீர்ப்பு கொண்ட பெண்களை ஒடுக்கி துன்புறுத்த .. 340: முறையின்றி தனிமைச் சிறைவைத்தல், ... 361: கவர்ந்து கடத்தல், .. 362: ஆள் கடத்தல், .. 366: வற்புறுத்தி திருமணத்திற்கு இணங்கவைத்தல் போன்ற அவதூறு வழக்குகள் அவ்வபொழுது உடன்பாடு இல்லாத பெற்றோர் மற்றும் உறவினர்களால் இரு பெண்களை கட்டாயப்படுத்தி பிரிக்க கையாளப்படுவதும் நிதர்சனம். பெரும்பான்மையான லெஸ்பியன் பெண்களை .. 377 இன் கீழ் தண்டிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, ஏனெனில் பாலுறுப்பு உட்செலுத்தலின் சாத்தியமின்மை என்ற  வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.... இருப்பினும் நீதிமன்றம் சட்டங்களை பொருள் கொள்ளும் முறையும், காவல் துறையினரும் , உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சட்டங்களை நோக்கும் விதமும் முற்றிலும் மாறுபட்டது.... மக்களின் புரிதலின்மையால் ஏற்ப்படும் முன்முடிவு எய்திய ஓரவஞ்சனையின் காரணத்தால் ஓர்பால் ஈர்ப்பினர் ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்…. காவல் துறையினரால் கைது செய்யப்படுவதும் பொது மக்களால் இழிவும் கேளிக்கையும் செய்யப்படும் அபாயமும் உள்ளது…. ஆதலால் சட்டம் நம்மில் தனி ஒரு நபரையோ, தனி பிரிவினரையோ, ஒட்டு மொத்த பால்விருப்பு/பாலீர்ப்பு சிறுபான்மையினரையோ தண்டனைக்கு உட்படுத்தும் எனில் நாம் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்….

ஓர்பாலீர்ப்பு நவீன வாழ்க்கை முறையின் தொனிப்பிறழ்ச்சி  அல்ல, இயற்கையாகவே தோன்றுவது: அது காலம் காலமாக நம் பண்பாட்டில் இடம் பெற்றுள்ளது, இவற்றை இயற்கைக்கு முரண் என்று எதிர்க்கும் சட்டங்களே மேற்கத்திய இறக்குமதி ஆகும்…. பழமையை போற்றும் நாம் பழமையில் புதைந்த சில பெண்ணடிமை சிந்தனையையும் தகர்த்தால் மட்டுமே சம உரிமை என்பது நமக்கு கிடைக்கும்…. சிவபுராணத்தில் ஆண் கடவுளாக சித்தரிக்கப்படும் சிவனின் விந்துவை அக்னி உட்கொண்டதாகவும், பின்னர் கார்த்திகை பெண்மணிகளின் உதவியினால் கார்த்திகேயன் பிறந்ததையும் வளர்க்கப்பட்டதையும்  நம்புவோர், ஆண் துணையின்றி பெண்கள் தனித்து குழந்தை பெறுவதை தகாத பாவச் செயலாகவே கருதுகின்றனர்.... ஆண்களான நாரதரும் கிருஷ்ணரும் ஓர்பால் பாலுறவு கொண்டதனால் பெற்று எடுத்த 60 பிள்ளைகளின் பெயரை கொண்டே 60 ஆண்டு சுழற்சி முறை (1. பிரபவம் - 60. அட்சயம்) உருவாகியதாக பஞ்சாங்கங்கள் கூறுகிறது. இரு ஆண் கடவுள்களின் சங்கமத்தில் பிறந்த ஐயப்பனை நோன்பு கொண்டு  வழிபடும் பக்தர்களும், திருமாலின் பற்றால் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வார் பாசுரங்களுடன் மார்கழியை பின்பற்றுவோரும் ஓர்பாலீர்ப்பை எதிர்ப்பது தங்கள் நம்பிக்கையையே எதிர்க்கின்றனர் என்பது புலப்படும்.... மனுஸ்மிரிதி போன்ற ஏட்டு சுரைக்காய்கள் ஓர்பாலீர்ப்பை இயற்க்கைக்கு முரண் என்று எதிர்க்கவில்லை எனினும் ஓர்பால் உறவில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களையே அதிக தண்டனைகளுக்கு உள்ளாக்குவதாக குறிப்பிடுகிறது.... ஓர்பால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பத்திய உணவை உண்பதும், சாதி விலக்கலும் தண்டனைகளாம்  ஆனால் பெண்ணுக்கோ சவுக்கு அடி, பொருள் அபராதம், கழுதை மேல் ஏற்றி ஊர்வலம்  என்று நீளும் பட்டியல் ஆணாதிக்க கற்பனையில் சமத்துவமின்றி இயற்றப்பெற்றவை என்பதையே வலியுறுத்துகிறது....


          மதங்களும் ஓர்பாலீர்ப்பை குற்றமாக சித்தரித்து, மனித இனத்தின் அழிவுக்கான செயல் என்றே குறிப்பிடுகிறது. மனித இனத்தின் அழிவு அப்படி தான் நிகழ வேண்டும் என்று 4.5 பில்லியன் ஆண்டுகள் அகவையுடைய இந்த பூமிப்பந்தும் இயற்க்கையும் தீர்மானித்தால் அதை சில காலம் மட்டுமே வாழும் மனிதர்களாகிய நம்மால் மாற்ற இயலுமா ? அன்பையும் காதலையும் பால் பாகுபாடின்றி முறையான காமமாக, விருப்பமுள்ள இருவர்  பகிர்வது மனித இனத்தின் மற்றறொரு பரிணாம தொடர்ச்சி என்பதை ஏற்க மறுக்கும் மதங்களே அன்புடைமையை போற்றும் நெறிகளிலிருந்து முரண்படுகிறது. 
              
கண்மூடித்தனமான தண்டனைகள் சமயசார்பின்றி சமநிலையுடன் செயல்படவேண்டிய இந்திய மக்கள் ஆட்சி முறையில் சாத்தியமா என்பதை கலாச்சார சீர்தூக்கிகளாக இருக்கும் பலர் எதிர்முழக்கமிடும் முன் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்…. கஜராஹோ வின் கலை நயம் மிக்க தொன்மையான கட்டிட கட்டமைப்பு நம் பண்பாட்டின் உண்மை நிலையை தெளிவாக சிற்பங்களின் வழியாக உணர்த்துகிறது…. இயற்க்கைக்கு முரணான சிற்பங்களை பண்டைய மக்கள் புனிதமாக கருதும், நன்னெறிகளை பொழியும் இடமான கோவில்களில் ஏன் வடித்தனர்? பின் வரும் மரபினர் இயற்க்கையாக  தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடு இனப்பெருக்கத்திற்கு உதவும் காம புணர்ச்சியை தாண்டி மனதை ஒருநிலைப்படுத்தும் ஓக நிலை என்பதை  அறிந்து கொள்ள அன்றி வேறு எதற்க்காக இருக்க முடியும்?

சட்டத்தை விட ஆற்றல் கொண்டது பொது மக்களின் பார்வையும் சமூக அங்கீகாரமும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.... இந்த நிலையை அடைய சிறுபான்மையினராகிய நாம் முதலில் நம்மை நாமே தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.... நமக்குள் இருக்கும் பேதங்கள் நாம் மற்றொருவரை வேற்றுமை படுத்துவதற்கு அல்ல, அடையாளப்படுத்தும் நோக்கமாக அமைய வேண்டும். நமக்கு எஞ்சி இருப்பது ஒரே வழி, கூடி நின்று குரல் கொடுத்து போராடுவது.... அதற்க்காக நீங்கள் பொது தளங்களில் போராட வேண்டும் என்பது பொருள் அல்ல, உங்களை ஓர்பாலீர்ப்பாளராக ஊருக்கே அறிவிக்கவும் அவசியமும் இல்லை.... 

     உங்களின்  நெருங்கிய வட்டத்தில் இந்த தலைப்பில் உரையாடல்களை தொடங்குங்கள்: மனிதர்களின் உயரம், தோல் நிறம், போன்றே பாலீர்ப்பு என்ற பண்பும் இயற்கையாக தோன்றும் பாலியல் வெளிப்பாடே (Alternative sexuality is a natural variation of human sexuality); இது உடலைத்தாண்டிய உணர்வு தழுவிய ஆக்கூறு; உண்மையான காதல் பால் பேதம் அற்றது; மனித உரிமைகளுள் காக்கப்படவேண்டியது என்ற புரிதலை ஏற்ப்படுத்தி கண்ணோட்டத்தை சீர்படுத்தினாலே போதுமானது…. 

              இந்த வாய்ப்பின் வழியாக நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தாரின்  எண்ணங்களில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே டெல்லியில் நடைபெற்ற அரசியல் புரட்சி போல் ஒரு பெரு மாற்றம் உருவாகும். மாற்றங்கள் "ஆம் ஆத்மி"யுடன் நின்றுவிடாமல்  "நாம் தொடருமி"ந்த சிறு செயல்களாலும் நிகழும்.... அந்த நாள் என்று வரும் என ஆவலுடன் அனைவரும் காத்துக்கொண்டு தான் இருக்கிறோம்…. அந்த நாள் வெகு விரைவில் விடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில் காத்துக்கொண்டே இருப்போம்….

அநீதிகளை களைய போராடும் 
கண்ணகி இளமலர்

மேற்கோள் இணைய முகவரி: